சனி, 24 நவம்பர், 2012

வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஞாயிற்றுக் கிழமை விரத வழிபாடுகள்

வார நாட்கள் ஏழும் ஏழு கிரகங்களைக் குறிப்பிடுகின்றன. ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்ற வரிசையில் நவக்கிரகங்களில் ராகுவையும் கேதுவையும் சேர்க்கப்படாமல், ராகுவுக்கு சனிக்கிழமையும் கேதுவுக்கு செவ்வாய்க் கிழமையும் ஆக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அதாவது சனிக்கிழமை வழிபாடு சனி, ராகு ஆகிய இரு கிரகங்களுக்கும் பரிகாரமாக அமைகிறது. 

செவ்வாய் வழிபாடு செவ்வாய், கேது ஆகிய இரு கிரகங்களுக்கும் பரிகாரமாக அமைகிறது. வாரத்தின் முதல் நாளான ஞாயிறு சூரிய பகவானுக்கு உரியதாகும். அதாவது சூரியன் என்ற கிரகத்தின்  தாக்கம் நமது பூமியின் மீது அதிகமாக உள்ள நாளாகும். 

சூரியன் என்ற தேவன் ஏழு குதிரை பூட்டிய தேரில் உலாவருகிறார் என்ற ஆன்மிகப் பார்வையையும், வானவில்லின் ஏழு நிறப் பிரிகையையும் (VIBGYOR) குறிக்கும் இயற்பியல் அறிவியல் நோக்கையும் ஒப்பிட்டுப் பார்ப்பதில் சுவாரசியமான ஆழ்ந்த பொருள் உள்ளது. ஜோதிட ரீதியாக சூரியன் ஆத்மக்கிரகம் என குறிப்பிடப்படும். 

அதாவது உடல் சக்தியையும், மனோ சக்தியையும், தாண்டி நமக்கு உள்ள ஆறாம் அறிவு சார்ந்த உயிரின் தன்னியல்பான வெளிப்பாட்டை குறிப்பிடும் கிரகமாக சூரியன் உள்ளது. ஒருவரது வாழ்க்கையில் அவரது தந்தையார், ஆன்மிக நிலை, அரசாங்க வழி ஆதாயங்கள், இதய நோய்கள், தோல் வியாதிகள் ஆகியவற்றைச் சுட்டிக் காட்டும் குறியீடாக சூரியன் அமைகிறது. 

ஞாயிற்றுக் கிழமையில் பிறந்தவர்கள், கிருத்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், 1, 10, 19, 28 ஆகிய ஆங்கிலத் தேதிகளில் பிறந்தவர்கள் யாவரும் சூரியனின் கிரக ஆதிக்கத்தை, மற்றவர்களை விட அதிகமாகப் பெற்றிருப்பார்கள். அதாவது பூமியில் சூரிய சக்யின் ஆளுமை பிரதானமாக இருக்கும் நேரத்தில் அவர்களது முதல் சுவாசம் இந்த பூ மண்டலத்தில் இனிதாக மலர்ந்திருக்கும். ராசிகளில், ராஜக்கிரகமான சூரியனின் ஆட்சிவீடான சிம்மம் தனது ஜன்ம ராசியாக அமைந்தவர்கள் விசேஷமான மனோ திடத்தைப் பெற்றவர்களாவார்கள். 

சூரியனின் தனித்துவமான சுய மரியாதை அவர்களது இயல்பான மனோ நிலையாகவெளிப்படும். சூரியனின் தினம், ராசி, தேதிகள், நட்சத்திரங்கள் ஆகிய அனைத்து அம்சங்களையும் தமது பிறப்பு இயல்பாகக் கொண்டவர்கள் யாவரும் 'ஞாயிறு வழிபாடு' மூலமாக வாழ்வில் நல்ல சந்தர்ப்பங்களைப் பெற்று முன்னேறலாம்.

அதாவது ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் எழுந்து நீராடி விட்டு வெள்ளை அல்லது வெளிர் சிவப்பு ஆடையை அணிந்து கொண்டு, காலை 6 முதல் 7 மணிக்குள் கிழக்கு முகமாக, இரண்டு அகல் விளக்குகளில் பசு நெய் விட்டு, அக்னியை வணங்கிவிட்டு விளக்கு ஏற்றி, தீப ஜோதியை வழிபட்டு விட்டு பின்பு சூரிய தரிசனம் செய்துவிட்டு, காலை உணவைத் தவிர்த்து மதியம் உணவு உட்கொண்டு விரத பூர்த்தி செய்யலாம். இது எளிய முறை. 

இன்னொரு முறை சம்பிரதாயமான பூஜா முறையாகும். அதாவது அதிகாலையில் எழுந்து காலை கடன்களை முடித்துவிட்டு பூஜையறையில் இஷ்ட தெய்வம் அல்லது சிவ பெருமான், அல்லது சூரிய நாராயணர் ஆகிய ஏதாவது ஒரு சூரிய தேவனின் தெய்வீகக் குறியீடுகளுக்கு வழக்கமான நெய் தீபத்தோடு கூடுதலாக ஒரு நெய் தீபம் ஏற்றி, தூப, தீபம், நைவேத்தியம், கற்பூர ஆரத்தி என்ற பூஜா முறையோடு 'ஓம் பாஸ்கராய நமஹ' அல்லது 'ஓம் ஆதித்யாய நமஹ' அல்லது 'ஓம் சூர்யாய நமஹ' என்ற மந்திர ஜபத்தை 108 முறை செய்து, பால் பழம் மட்டும் சாப்பிட்டு விட்டு பூரண உபவாசமிருந்து மாலையில் தீபமேற்றி வழிபாடு செய்து விரதத்தை முடிக்கலாம். 

சூரியனுக்காக செய்யப்படும் யாவும் கிழக்கு முகமாக அமைவதே சிறப்பாகும். மேலும் சூரியனுடைய மேற்குறிப்பிட்ட தேதி, நட்சத்திரம், ராசிகளில் பிறந்து மேற்கு மற்றும் தெற்கு வாசல் தலை வாயிலாக உள்ள வீட்டில் குடியிருப்பவர்கள் வாழ்வியல் சிக்கல்களில் எதிர் நீச்சல் போட்டுக் கொண்டிருப்பார்கள். 

அவர்கள் ஞாயிறு வழிபாட்டு முறையைக் கையாள்வதோடு, ஞாயிறன்று அசைவத்தை தவிர்ப்பதும் அவசியம். சூரியனின் காரகத்துவத்தைக் குறிப்பிடும் தந்தை, மற்றும் தந்தை வர்க்கத்தவர்களிடம் பிரியமும் அன்பும், பணிவும் கொண்டு சுமூகமான உறவைக் கைக்கொள்வதால் மனதில் எவ்விஷயம் குறித்தும் குழப்ப நிலை ஏற்படாத தெளிவான போக்கு உண்டாகும். 

அனைத்து உறவு முறைகளுடனும் சுமூகமான போக்கு நிலவுவதற்கு அது எளியமுறை நடைமுறை சாத்தியமான விஷயமாகும். 'ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்...' என்று பழமையான வழிகாட்டுதலை இப்போது நினைப்பது பொருத்தமானதாகும். மிகப் பரப்பிரம் மாண்டமான பிரபஞ்சம் என்ற மாபெரும் சக்திக் களஞ்சியத்திலிருந்து நமக்குத் தேவையானவற்றை பெறும் வழிமுறைகள் சாஸ்திரங்களாகத் தரப்பட்டிருக்கின்றன. 

கால நிலையின் தவிர்க்க இயலாத பன்முக வளர்ச்சியின் பண்பாட்டு உச்சங்களால் அவை சுலபமாகத் தவிர்க்கப்பட்டு விட்டன. ஆனால், மிகக் கடினமான சிக்கல்களுக்கும் எளிய தீர்வுகளை அதில் கண்டெடுக்கலாம் என்ற புதிய பார்வை மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறது. அது நிச்சயம் நல்லதே. 
1-11-12_findyour_INNER_468x60.gif
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக