சனி, 24 நவம்பர், 2012

புத்துணர்ச்சி தரும் கந்த சஷ்டி விரதம்


எத்தனை மந்திரங்கள், பாடல்கள், தோத்திரங்கள் இருந்தாலும் பெரும்பாலானவர்கள் மிகவும் விரும்பி படிப்பது சஷ்டி கவசமே. இது எளிமையான தமிழ் மொழியில் இருப்பதால் சொல்வதற்கும் எளிமையாக உள்ளது. எனவே அதிக அளவில் பெண்கள் சஷ்டி கவசம் படிக்கிறார்கள். கந்த சஷ்டி கவசத்தில் சுவாமிகள் கூறியது போல், நம் நினைவெல்லாம் முருகனாக இருந்தால் அஷ்ட லட்சுமிகள் நம் வீட்டில் வாசம் செய்வார்கள். சஷ்டி விரதம் இருப்பதினால் நவகிரகங்களும் நமக்கு நன்மையே செய்யும். இந்த தெய்வ சிந்தனை வருடத்தில் ஒருமுறை, ஒரு நாளோ அல்லது மூன்று நாளோ, இல்லை ஆறு நாளோ இருந்தால், நம் மனதுடன் உடலும் சுத்தமாகிறது. சஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் எளிய உணவை உட்கொண்டு, அதிக வேலை செய்யாமல், மவுனத்துடன் இருப்பதால் உடலில் நச்சுப் பொருட்கள் தானாகவே வெளியேறி நம் உடலும், குடலும் சீராகிறது. விரதத்தால் நம் உடலும் உள்ளமும் தூய்மை அடைகிறது. மனதில் இருந்து உருவாகும், காம, குரோத அறுவகை கெட்ட குணங்களையும், ஆறுமுகன் எப்படி சூரபத்மனை அழித்தானோ அவ்விதமே நமது குணங்களையும் அழித்து விடுகிறான். கெட்டவை நீங்க, நல்லவை நம் மனதில் குடியேறுகிறது. உள்ளமும் உடலும் புத்துணர்ச்சி பெறுகிறது. முருகனது கருணை எங்கும், எப்பொழுதும் பொங்கி வழிகிறது. நமக்கு முருகனிடம் எவ்வளவு ஈடுபாடு உள்ளது என்பதை காட்டும் உறைகல் தான் இந்த விரதங்கள். நம்மால் இயன்றளவு விரதம் இருக்கலாம். வீட்டிலேயே விரதமிருந்து, ஆறுமுகனை அர்ச்சிக்கலாம். வீட்டில் வசதியில்லாதவர்கள் கோவிலுக்கு சென்று வழிபடலாம். முடிந்தவர்கள் திருச்செந்தூர் போய் வரலாம். முடியுமளவு, உள்ளத்தூய்மையுடன் முருகப்பெருமானை வணங்கி அவனது அருளைப் பெறலாம். முருகனுக்கு உகந்த மலர்கள்:- மல்லிகை, முல்லை, ரோஜா, திருநீற்றுப் பச்சை, சாமந்தி, செவ்வரளி. அபிஷேகப் பலன்கள்:-  மஞ்சள் நீர்- வசீகரணம், சந்தனம்- லட்சுமி கடாட்சம், பஞ்சாமிர்தம்- ஜெயம், தயிர்- மக்கட்பேறு, பால்- ஆயுள் விருத்தி, தேன் - இனிய குரல், இளநீர் - யோகம். முருகனை வழிபட செவ்வாய் தோஷம் நீங்கும். கார்த்திகை விரதம், செவ்வாய் கிழமை விரதம் இருந்து முருகனை வழிபட செவ்வாய் தோஷங்கள் விலகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக